
செங்கோட்டையனை நீக்கியது அதிகாரத்தின் உச்ச நிலை என்றும் இது அழிவுக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார். இதனை யடுத்து, மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பேசிய போது, “எல்லாம் நன்மைக்கே” என்று மட்டுமே கூறினார்.
தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாலேயே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பேசியபோது, செங்கோட்டையனை நீக்கியது அதிகாரத்தின் உச்ச நிலை என்றும் இது அழிவுக்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டினார்.



