
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்புப் பூஜைகள் நடந்து வருகிறது.
விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது.
தொடர்ந்து இரவு 9 மணிக்குச் சாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடும் நடைபெறுகிறது.
பின்னர் நாளைத் தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்குத் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பழனி மலைக்கோவிலில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை சாமி தரிசனத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
அதனால், அனைத்து வரிசைகளிலும் கட்டணமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
