தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 11 குழுக்கள் தயாராக உள்ளனர். துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் தலா 30 வீரர்களைக் கொண்ட 11 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
அரக்கோணத்திலிருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருகை தந்துள்ளனர்.