
இடி மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு 5 இலட்சம் ரூபாய் தானா? என்று வினவியுள்ள பாமக தலைவர் அன்புமணி 25 இலட்சம் இழப்பீடும் அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் அரியநாச்சியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் நால்வர் பெண்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்ச ரூபாய் மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது போதுமானதல்ல என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், கரூரில் தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவு படைக்கும் கடவுள்களான பெண் விவசாயிகளின் குடும்பங்களுக்கு 5 இலட்ச ரூபாய் மட்டும் வழங்குவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அவர்களின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடி தாக்கிய இந்த விபத்தில் பார்வையை இழந்திருக்கும் தவமணி என்ற பெண்மணிக்குத் தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவருக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



