
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒட்டிச் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி நேரம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியை ஒட்டிச் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மெட்ரோ சேவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இன்று ஒருநாள் மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி முடிந்ததும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நீல வழித்தடத்தில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை வரையிலும், பசுமை வழித்தடத்தில் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து பரங்கிமலை வரையிலும் ரயில் இயக்கப்பட உள்ளது. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், ரசிகர்கள் கிரிக்கெட் டிக்கெட்டுகளை காண்பித்து கட்டணமின்றி வீட்டிற்கு பயணிக்கலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

