தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது? இப்போது நிலவும் கடும் வறட்சிக்குக் காரணம் என்ன? அந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர்கள் யார்? தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு சொன்னபோது, மதியாதார் தலைவாசலை மிதித்தவர் யார்? மழை பெய்ததால் தண்ணீர் வந்ததா? கர்நாடகம் திறந்ததால் வந்ததா? தவெக அரசின் முயற்சியால் வந்ததா? என்பதையெல்லாம் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து ” – நல்வழி பாடல் : 9 ஔவையார்
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் நல்ல சாரல் மழை பெய்யும். அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும். தடுப்பணைகள் அன்றித் தேக்க அணைகள் இல்லாத அக்காலத்தில் இதனால் தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலுமே வெள்ளப்பெருக்கு ஏற்படும். தென்மேற்குப் பருவமழையின் இயல்பு அது மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே உள்ள மலையாளத்தில் கனமழையாகப் பெய்யும். மலைத்தொடர்கள் காற்றைத் தடுத்து அங்கேயும் கனமழை பெய்யும்.
அதன்பின் காற்றின் எஞ்சிய ஈரப்பதம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் பெய்யும். வீசும் காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது மலையில் இருந்து கிழக்கே அதிகத் தொலைவுக்குப் பெய்வதுண்டு. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். இதனால் ஆடியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும். அதிக மழைப்பொழிவால் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதிலும் ஆடிப் பதினெட்டாம் நாளில் தமிழ்நாட்டின் எல்லா ஆறுகளிலுமே புதுப்புனல் பாயும். அதில் நீராடி மகிழ்வதும், நீர் விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் ஆற்றங்கரையோர ஊர்களில் வாழும் மக்களின் இயல்பு.
மாதந்தோறும் அமாவாசை நாட்களிலும், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளிலும் தொலைவில் உள்ள மக்களும் ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வந்து ஆற்றில் நீராடி முன்னோரை வழிபட்டுச் செல்வதுண்டு. இத்தகைய நீராடல் சிலப்பதிகாரக் காலத்திலேயே இருந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை ஓய்ந்த பின் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வடகிழக்குப் பருவமழை பெய்யும். இதனாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போதும் ஆறுகளில் நீராடும் வழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக ஐப்பசி மாதத்தைத் தமிழில் துலா மாதம் என்கிறார்கள்.
இந்தத் துலா மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள காவிரியாற்றின் துலாக்கட்டத்தில் மக்கள் நீராடுவது இன்றும் நடைபெற்று வரும் தொன்றுதொட்ட வழக்கமாகும். தாமிரபரணி, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு எனத் தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் இவ்வாறான நீராடல் வழக்கம் இருந்துள்ளது. இருந்து வருகிறது. பருவமழைக் காலங்களில் பெருமழையால் வெள்ளப்பெருக்கால் பயிர்களும் உயிர்களும் சேதமடைந்த நிலையில், பொங்கிப் பாயும் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டினால் வெள்ளத்தால் ஏற்படும்ம் அழிவைத் தடுக்கலாம்.
கால்வாய் வெட்டித் தண்ணீரைக் கொண்டு சென்று கூடுதல் பரப்பில் பயிர்செய்யலாம் என்று எண்ணிக் கட்டப்பட்டது தான் கல்லணை. இதேபோலத் தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும் சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றால் வெள்ளக்காலத்தில் நீரைத் தேக்க முடியாது. அதேநேரத்தில் வரும் தண்ணீரை ஆற்றின் இருகரைக் கால்வாய்கள் வழியாகப் பாசனத்துக்குத் திருப்பிவிட முடியும். ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டின் பாசனத்துக்குக் கட்டப்பட்ட அணைகளில் குறிப்பிடத் தக்கவை, தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை, காவிரியின் முக்கொம்பு அணை, கொள்ளிடத்தின் கீழணை, மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாபநாசம் அணை ஆகியன.
இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்காகக் கேரளத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே ஓர் அணை கட்டித் தண்ணீரைத் தேக்கி நீர்த்தேக்கத்துக்குப் பின்புறம் மலையில் சுரங்கக் கால்வாய் அமைத்து அந்த நீரை வைகையில் கலந்து விட்டால் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் செழிக்கும் என்ற எண்ணத்தில், இராமநாதபுரம் மன்னரின் முயற்சியால் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குவிக்கால் கட்டப்பட்டது பெரியாறு அணை. சேலம் மாவட்டம் மேட்டூரில் கட்டப்பட்டுள்ள அணைதான் தமிழ்நாட்டில் உள்ளதிலேயே கொள்ளளவில் பெரிய அணையாகும்.
இதில் 93 டிஎம்சி நீரைத் தேக்க முடியும். டிஎம்சி என்பது தௌசண்ட் மில்லியன் கியூபிக் பீட், அதாவது ஆயிரம் மில்லியன் கன அடி. அதாவது நூறு கோடி கன அடி. நாடு விடுதலையடைந்தபின் முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சாத்தனூர், பவானி, அமராவதி, வைகை, மணிமுத்தாறு ஆகிய அணைகளைக் கட்டிப் பாசனத்துக்கும் பசுமைப் புரட்சிக்கும் வழி செய்தார்.இந்த அணைகள் எல்லாம் செழிப்பான காலத்திலும் வெள்ளக்காலத்திலும் மொத்த நீரும் வடிந்து விடாமல் ஓரளவு நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு பின்வரும் காலங்களில் அவற்றைப் பயன்படுத்த உதவுகின்றன.
இந்த அணைகளில் தேக்கப்படும் நீரின் அளவு குறைந்துவிட்டால் குடிநீருக்கு என்று கூறித் தண்ணீரைக் கீழே பாசனத்துக்குத் திறப்பதில்லை. அதே நேரத்தில் ஆலைகளின் பயன்பாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கப்படுகிறது என்பது உழவர்களின் குற்றச்சாட்டு. மேட்டூர் அணையில் 90 அடிக்கு நீர்மட்டம் இருந்து, நீர்வரத்தும் இருந்தால் ஜூன் 12ஆம் நாளில் குறுவைப் பட்ட நெல் பயிரிடுவதற்குத் தண்ணீர் திறந்துவிடலாம். இந்த ஆண்டில் 90 அடிக்குக் கீழே நீர்மட்டம் இருந்ததாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
திறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே கருநாடக அரசுக்கு வலியுறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் மறுத்தால் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டும். ஆனால் அதே காலத்தில் தில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்தார். காவிரி பற்றிப் பேசினாரா? என்று தெரியவில்லை. மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெற்பயிருக்குத் தண்ணீர் திறக்க வேண்டிய நாளில் திறக்க முடியவில்லை. ஆனால் அதே நாளில் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த அவமானம் என்னவென்றால், எந்தக் கருநாடகம் தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரைத் திறந்துவிட மறுத்ததோ, அதே கருநாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் தில்லியில் இருந்து மங்களூருக்குச் சென்று அங்கிருந்து சென்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
அன்று அவர் சென்றிருக்க வேண்டியது மங்களூருக்கு இல்லை. மைசூருக்குச் சென்று கிருஷ்ணராஜ சாகர் அணைக்குச் சென்று பார்வையிட்டுவிட்டுப் பெங்களூருக்குச் சென்று அந்த மாநில முதலமைச்சரிடம் பேச்சு நடத்தி இருக்க வேண்டும். அவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஆண்டு முழுவதும் கும்பிடப் போகலாம். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டிய நாளில், திறக்க முடியாத நிலை இருந்த நாளில் போனது பேரவமானம் ஆகும். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று ஔவையார் சொன்ன சொல்லை அவர் நினைவிற்கொள்ள வேண்டும். நம்மை மதித்துத் தண்ணீர் திறந்துவிடாதவரின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் தான் செல்ல வேண்டுமா? தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களே இல்லையா?
காவிரியில் தமிழ்நாட்டுக்கு நொடிக்கு 3500 கனஅடி என்னும் அளவில் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும், அதுவும் தமிழ்நாட்டு எல்லையில் புலிக்குன்று என்னுமிடத்தில் இந்த அளவில் தண்ணீர் வந்துசேர்வதே கணக்கு என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, இங்கே குடிநீருக்கே தண்ணீர் இல்லை, இந்நிலையில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று முதலமைச்சர் சிவக்குமார் ஆணவத்துடன் கூறுகிறார். துணைக்கு அங்குள்ள எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவையும் சேர்த்துக்கொள்கிறார்.
எங்கே தண்ணீர் திறந்துவிட்டு விடுவார்களோ என்று கருதிக் கர்நாடக பாஜகவினர் கிருஷ்ணராஜசாகர் அணை முன் போராட்டம் நடத்துகின்றனர். அணையில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் பாதியைத் திறந்துவிடலாமே. அதற்கு அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. ஒவ்வொரு முறையும் அணை நிரம்பிய பிறகே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதேபோல்தான் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. அங்கிருந்து முதலில் நொடிக்குப் பத்தாயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டது.
அதன்பிறகு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் பாதுகாப்புக் கருதி நொடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. இது நீர்வரத்தைப் பொறுத்துக் கூடலாம் குறையலாம். மழை நின்றுவிட்டால் நீர் திறப்பும் நிறுத்தப்படலாம். கபினி அணையைப் பொறுத்தவரை இதிலிருந்து ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கிழக்கே உள்ள பகுதியில் காவிரியாற்றில் கலக்கிறது. அதனால் இந்த நீர் சிறு சிறு தடுப்பணைகளில் பிரிவது போகப் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும். ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் காவிரியில் கலந்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கே வரும். அந்த அணை நிரம்பினால்தான் கீழே திறக்கப்படும்.
மேற்கு மலைத்தொடரில் கனமழை பெய்ததாலும் பத்தொன்பதரை டிஎம்சி கொள்ளளவுள்ள கபினி அணை நிரம்பியதாலும், அதற்குக் கீழே தேக்க அணை ஏதும் இல்லாததாலும் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும். இதே நேரத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் நமக்கு உரிய பங்குத் தண்ணீரைத் திறந்து விடச் சொல்லி அதைப் பெறுவதே அரச தந்திரமாகும். அதைக் கேட்டுப் பெறும் தகுதி தமிழ்நாட்டுத் தவெக அரசுக்கு உள்ளதா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். மேற்குப் பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டு விட்டதால், மழை பெய்யும் காலத்திலும் அங்கே தண்ணீர் தேக்கப்படுவதால், அங்கே திறந்துவிட்டால் தான்,
அதாவது கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும், தமிழ்நாட்டில் மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் தண்ணீரைத் திறந்துவிட்டால்தான் காவிரியில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாட முடியும் என்னும் நிலைதான் இப்போது உள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் ஒரே அளவில் செழிப்பாக மழை பெய்வதில்லை. ஓரிரு ஆண்டுகள் மழையளவு குறையலாம். சில ஆண்டுகளில் மழை பெய்யாமலேயே போகலாம். ஆனால் செழிப்பாகப் பெய்யும் காலத்தில் வரும் வெள்ளம் ஆற்றுமணலுக்கிடையே ஈர்க்கப்பட்டு நிலத்தடி நீராகப் பஞ்சக் காலத்துக்குப் பயன்படும்.
கண்ணுக்குத் தெரியாமல் தண்ணீரைத் தேக்கி வைக்கும், தோண்டினால் நீர் ஊறும், தொட்டனைத்தூறும் மணற்கேணியாக விளங்கிய ஆறுகளைப் பாழ்படுத்திய பழி திமுக அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையே சேரும். எந்தக் கேரள அரசு நெய்யாறு அணைத் தண்ணீரைக் கன்னியாகுமரி மாவட்டத்துக்குத் தர மறுக்கிறதோ, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைத் தமிழ்நாட்டுக்குப் பயன்படும் வகையில் 152 அடி உயரத்துக்குத் தேக்கவிடாமல் தடுக்கிறதோ, அந்த மாநிலத்துக்குத் தான் இங்கிருந்து ஆற்று மணலை அள்ளியும், கருங்கற்களை உடைத்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் கடத்தி விற்றனர்.
எந்தக் கர்நாடக அரசு அங்குள்ள அணைகள் நிரம்பினாலன்றித் தமிழ்நாட்டுக்குச் சொட்டுத் தண்ணீரையும் விடமாட்டோம் என்று இறுமாப்புடனும் ஆணவத்துடனும் சொல்கிறதோ, அந்தக் கர்நாடகத்துக்குத் தான் இங்கிருந்து காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆற்று மணலைப் பல்லாயிரக் கணக்கான லாரிகளில் அள்ளிக் கடத்தி விற்றனர். தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்கும், குன்றுகளில் இருந்தும் உடைக்கப்பட்ட கற்களைக் கொண்டுபோய் விற்றனர். கேட்டால் கட்டுமானத் தொழிலுக்கு ஆற்றுமணலும், கருங்கற்களும் வேண்டுமே, அவை இல்லாவிட்டால் நீங்கள் எப்படி வீடு கட்டுவீர்கள், இங்கே எப்படி நால்வழிச்சாலை அமைக்க முடியும்? என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் போல இரு திராவிடத் திருடர்களும் பேசுவர்.
ஆனால் உண்மை அப்படி இல்லை. இங்கிருந்து ஆற்றுமணல் இலங்கைக்கு, மாலத்தீவுக்கு, மொரிசியசுக்குக் கடத்தப்பட்டது. கேரளத்துக்குக் கர்நாடகத்துக்குக் கடத்தப்பட்டது. இங்கிருந்து கற்களை வெட்டியெடுத்துப் பல நாடுகளுக்குக் கடத்தினர். கேரளத்துக்கு, கர்நாடகத்துக்குக் கடத்தினர். கேரளத்தின் விழிஞத்தில் அதானி கட்டிய துறைமுகத்துக்காக மொத்தக் கற்களும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தே வெட்டிக்கொண்டுசெல்லப்பட்டன. தமிழ்நாட்டின் நலனில் கொஞ்சமும் அக்கறை இருந்தால் இப்படிச் செய்திருப்பார்களா?
இந்த மலைகள் வெட்டப்படா விட்டால், இந்த ஆறுகளில் மணல் அள்ளப்படாமல் இருந்திருந்தால் எத்தகைய வறட்சிக்காலத்திலும் நமக்குத் தேவையான நீரை அவை ஊற்றுகளாக இருந்து தந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டுக்கு ஆற்று நீரை அற்றுப் போகச் செய்தது கேரள கர்நாடக ஆந்திர மாநில அரசுகள் என்றால், ஆற்றின் மணலை அள்ளி ஊற்றுநீரை அற்றுப் போகச் செய்தது திமுக, அதிமுக என்னும் தமிழ்நாட்டின் இருபெரும் திருட்டுத் திராவிடக் கட்சிகள் தான் என்பதே உண்மை. காவிரி கொண்டான் என்று பட்டம் சூட்டிக்கொண்ட திமுக தலைவர் கருணாநிதியின் காலத்தில்தான் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கபினி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டிக்கொண்டது.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த பெருமை மட்டுமில்லை அவருக்கு. தமிழ்நாட்டின் ஆறுகளில் பெருமளவு மணற்கொள்ளையைத் தொடக்கி வைத்துப் பாலாறுகொன்றான், காவிரிகொன்றான், தென்பெண்ணைகொன்றான், வைகைகொன்றான், தாமிரபரணி கொன்றான், நம்பியாறுகொன்றான் என்ற பட்டப்பெயர்களும் அவருக்கே உரியது. இன்றும் கூடக் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். எங்களின் முயற்சியால் தான் திறந்தனர் என்று ஒருபுறம் தவெக அரசு மார்தட்டலாம். உங்கள் முயற்சியால் என்றால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நொடிக்குப் பத்தாயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்புக் கருதித் திறந்துவிடப்பட்டதே இப்போது வந்துகொண்டிருக்கும் நீர். அவர்களிடம் தண்ணீர் கேட்டு நீங்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. அதற்காக எந்தப் பேச்சும் நடத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்த அவர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் இயற்கையில் கனமழை பெய்ததால் அதைத் தேக்க வழியின்றிக் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. அதே நேரத்தில் கபினி அணை மட்டுமல்ல, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் தண்ணீரைத் திறந்துவிட்டாலும் அந்த நீர் நம் தமிழ்நாட்டுக்குப் பயன்படும் படி செய்யும் இயற்கையின் வைப்பகங்களான மணலை அள்ளி விற்றுக் கோடி கோடியாய் ஈட்டிய பணமும் சொத்துக்களும் அந்த ஊழல் அரசியலார்க்கு ஒருபோதும் வாய்க்காமல் போகட்டும்.
ஆற்று மணலை அள்ளி விற்றது மட்டுமல்லாமல், பெருவெள்ளம் வரும்போது பாலங்களும் அணைகளும் இடிந்து உடைந்து விழும்போதும், உயரழுத்த மின்கோபுரங்கள் சாய்ந்து விழும்போதும் அதற்கு மணற்கொள்ளை காரணம் இல்லை என்று கூறித் தங்கள் தவறை மறைக்கும் போக்கு இருபெரும் திருட்டுத் திராவிடக் கட்சித் தலைவர்களிடமும் இருந்தது. அந்த அரசியல் பிழைக்குத் தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க தண்டனை அளித்துள்ளனர்.இதை இப்போதுள்ள தவெக அரசும் உணர வேண்டும். உங்களுக்குக் கிடைத்துள்ள ஐந்தாண்டுக் காலத்தில் முந்தைய திருட்டுத் திராவிட அரசுகளைப் போலவே மண், மணல், கல் ஆகிய இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தால் அடுத்த தேர்தலில் மக்கள் உங்களையும் தூக்கி எறிவர் என்பதை மனத்திற்கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளில் ஆற்றில் தண்ணீர் வராதது மட்டுமல்லாமல், மணலும் இல்லை என்னும் அளவில் அரசியலில் பிழை செய்தவர்களை அறம் தண்டித்து விட்டது. இன்னும் தண்டிக்கும்.