Womens T20 World Cup 2024: நாங்க தான் மாஸ்! அதிரடி காட்டும் ஹர்மன்ப்ரீத் கவுர்!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பங்கேற்கும் இந்திய அணிதான் இதுவரை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகளிலேயே பலமானது என்று ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனிடையே ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அக்டோபர் 3 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒரு முறை கூடக் கோப்பையை வென்றதில்லை. இச்சூழலில் தான் இந்திய ஆடவர் அணியைப் போல் இந்திய மகளிர் அணியும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிதான் இதுவரை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகளிலேயே பலமானது என்று ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்த அணியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், தொடர்ந்து எங்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் சில வீராங்கனைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்களின் ரோல்கள் என்னவென்று தெளிவாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை இதுதான் டி20 உலகக் கோப்பையில் நம்முடைய மிகச் சிறந்த அணி என்று சொல்வேன்.

பூஜா வஸ்த்ரக்கர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ரேணுகா சிங் அவருக்கு நல்லபடியாகச் சப்போர்ட் கொடுக்கிறார். ரேணுகா எப்போதுமே எங்களுக்குத் தொடக்கத்திலேயே எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கம் கொடுக்கிறார். அதேபோல் அருந்ததி ரெட்டியும் ஒருசில நல்ல ஓவர்கள் பந்துவீசுவதன் மூலம், தேவையான நேரத்தில் பேட்டிங் மூலமும் அணிக்குக் கைகொடுக்கிறார்.

அது அணியின் பேட்டிங் டெப்த்தையும் பலப்படுத்துகிறது. அதேசமயம் இந்திய பௌலிங் யூனிட்டை மற்ற அணிகளின் பௌலிங் யூனிட்டோடு நான் ஒப்பிட விரும்பவில்லை. ஒவ்வொரு அணிக்கும் அவர்களுக்கே உரிய பாசிடிவ்களும், நெகடிவ்களும் இருக்கின்றன. ஆனால் என்னுடைய அணிமீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். அவர்களால் என்ன செய்ய முடியும் என்றும் தெரியும்.ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டோம். அந்த மொத்த தொடரிலும் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினோம் என்று சொல்வேன். அந்த ஒரே ஒரு நாள், அந்த ஒரே ஒரு ஆட்டம் நாங்கள் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. அதனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எங்கள் பயிற்சி முகாம்களில் பிரச்னைகளை எப்படி சரிசெய்வது என்பது பற்றி அமர்ந்து விவாதித்தோம். இந்த மாதிரியான சூழ்நிலை மீண்டும் வந்தால், அதைச் சமாளிக்க என்னென்ன விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதைப் பற்றியும் விவாதித்துள்ளோம்”என்று கூறியுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *