விசிகவில் வெடித்த உள்கட்சி போர். தவெக கூட்டணியால் சிக்கலில் விசிக.!

Advertisements

விசிகவுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக அரசியல் விவாதமாக மாறியுள்ளன. இந்த உள்கட்சி மோதல் ஏன் உருவானது? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் காரணங்கள் என்ன? அதை விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக அரசியல் களத்தில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆன நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசில் அமைச்சரவைப் பொறுப்பைப் பெற்றுள்ள விசிகவில், இதற்கு முன் இல்லாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, சமூக நீதித்துறை அமைச்சராக உள்ள வன்னியரசு, தவெக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால், அவர் விசிகவின் பிரதிநிதியாக அல்லாமல், தவெகவின் தீவிர ஆதரவாளரைப் போல செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் கட்சியின் உள் வட்டாரங்களிலேயே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம், ஆளூர் ஷாநவாஸ், தவெக அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனால், அமைச்சரவைப் பங்காளியாக இருக்கும் விசிகவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த இருவேறு அணுகுமுறைகளுக்கு மத்தியில், கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இதுவரை வெளிப்படையான கருத்தைத் தெரிவிக்காமல் இருப்பதும், விசிகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, வன்னியரசுவின் அரசியல் அணுகுமுறை குறித்து விசிகவின் உள் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கேற்றதன் நோக்கம் சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட கட்சியின் கொள்கைகளை ஆட்சியின் மூலம் முன்னெடுப்பதே என விளக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள்ளேயே விவாதங்கள் எழுந்துள்ளன.

அரசின் பெரும்பாலான முடிவுகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதிலும், ஆட்சியின் நடவடிக்கைகளை தொடர்ந்து நியாயப்படுத்திப் பேசுவதிலும் வன்னியரசு முன்னிலை வகிப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவிக்காத சூழல்களிலும், அரசின் நிலைப்பாட்டை விளக்குவதில் அவர் தீவிரமாகச் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், “கட்சியின் சித்தாந்தம் மற்றும் தனித்துவ அடையாளத்தை விட, கூட்டணி அரசின் நிலைப்பாட்டையே வன்னியரசு அதிகமாக பிரதிபலிக்கிறார்” என்ற அதிருப்தி, விசிகவின் சில இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதே நேரத்தில், ஆட்சிப் பொறுப்பில் இருப்பதன் தாக்கம், விசிக தொடர்ந்து வலியுறுத்தி வந்த தலித் உரிமைகள், சமூக நீதி மற்றும் முற்போக்கு அரசியல் சார்ந்த அடையாளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வன்னியரசுவின் இந்த அமைச்சரவை விசுவாசத்திற்கு நேர்மாறாக, ஆளூர் ஷாநவாஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். தவெக அரசை அமைக்கும் முடிவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆளூர் ஷாநவாஸ் முழுமையான ஆதரவை வழங்கவில்லை என்ற பேச்சு நிலவி வந்த நிலையில், தற்போது அது வெளிப்படையான கருத்து வேறுபாடாக மாறியுள்ளது. அண்மைய நாட்களில், தவெக அரசின் பல்வேறு முடிவுகளை ஆளூர் ஷாநவாஸ் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதிகாரத்தில் பங்கேற்பது என்பது கொள்கைகளை விட்டுக்கொடுப்பதற்காக அல்ல என்ற நிலைப்பாட்டில் ஆளூர் ஷாநவாஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அவரது விமர்சனங்கள் தவெக தலைமையை மட்டுமின்றி, அமைச்சரவைப் பொறுப்பில் உள்ள விசிக தரப்பையும் சிக்கலான சூழலுக்கு தள்ளியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக, சிறுபான்மையினர் நலன், வேலைவாய்ப்பு கொள்கை மற்றும் சமூக நீதி தொடர்பான விவகாரங்களில் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளூர் ஷாநவாஸ் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். “நாம் அரசைக் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்க வேண்டும்; அவர்களின் நிழலாக மாறக் கூடாது” என்ற அவரது நிலைப்பாடு, விசிகவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இருவேறு முரண்பட்டப் பாதைகளுக்கு நடுவே சக்கர வியூகத்தில் சிக்கியதை போல நிற்கிறார் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.பொதுவாக எந்தவொரு அரசியல் சூழலிலும் மிகத் தெளிவான, அழுத்தமான கருத்துக்களை முன்வைக்கும் திருமாவளவன்.. கடந்த சில மாதங்களாகவே மாறி மாறி பேசி வருகிறார்.

மாறி மாறி நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார். இப்போது நிலவும் உள்கட்சிப் பூசல் குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். வன்னியரசுவை அழைத்து எச்சரிக்கவோ, அல்லது ஆளூர் ஷாநவாஸின் விமர்சனங்களைக் கட்டுப்படுத்தவோ முடியாமல் அவர் திணறுவது தெளிவாகத் தெரிகிறது. தவெக கூட்டணியை முறித்துக் கொண்டால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் செல்வாக்கு பறிபோகும்;

அதே நேரத்தில் தவெக வை முழுமையாக ஆதரித்தால் கட்சியின் தனித்துவமான கொள்கை அடையாளம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்ற இருமுனை கத்தியின் மீது திருமாவளவன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *