
தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடி வருவதால், ரேஷனில் வினியோகம் செய்யக் குறைந்த விலை மசூர் பருப்பை கொள்முதல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. அதிக விலையில் கனடா பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இதை, நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியாரிடம் வாங்கியது.துவரம் பருப்பு விலை அதிகமானதால், அதே சுவை, சத்துக்கள் உடைய கனடா லென்டில் மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது. இது, கனடாவிலிருந்து இறக்குமதியாகிறது.
ரேஷனில் மாதம், 20,000 டன் கனடா பருப்பு வழங்கப்படுகிறது. அதற்குத் தேவை அதிகரித்ததால் விலையும் உயர்ந்தது. துவரம் பருப்பு விலைக்கு இணையாகக் கனடாபருப்பின் விலை உள்ளது.
துவரம் பருப்பில் உள்ள புரதம் உள்ளிட்ட சத்துக்கள், ‘ரெட் லெண்டில்’ எனப்படும், மசூர் பருப்பிலும் உள்ளன. இது, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் விளைகிறது; குறைந்த விலையிலும் கிடைக்கிறது.
உள்நாட்டில் துவரம்பருப்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. அதன் விலையைக் கட்டுப்படுத்த, பொது வினியோக திட்டங்களுக்கு, மசூர் பருப்பை கொள்முதல் செய்து பயன்படுத்துமாறு, மாநில அரசுகளை மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாகச் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறைந்த விலை மசூர் பருப்பு கொள்முதல் செய்யக்கோரும் மனுவைப் பரிசீலிக்குமாறு, நீதிமன்ற மும் தமிழக அரசுக்குஅறிவுரை வழங்கியது.ஆனால், அரசுத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது, 60,000 டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பு வாங்க நுகர்பொருள் வாணிப கழகம்டெண்டர் கோரியுள்ளது.
வெளிச்சந்தையில் கிலோ மசூர் பருப்பு விலை, 80 – 85 ரூபாயாக உள்ளது. வாணிப கழகம், ஜனவரியில், ஒரு கிலோ கனடா பருப்பை, 129.65 ரூபாய்க்கு வாங்க ஆணை வழங்கியது.ஆதாயம் கிடைப்பதற்காகக் கனடா மஞ்சள் பருப்பு வாங்குவதற்கு பதில், மத்திய அரசின் பரிந்துரையின்படி மசூர் பருப்பு வழங்கினால், அரசுக்கு, 300 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும். எனவே, மசூர் பருப்பு கொள்முதல் செய்து, நிதி இழப்பு ஏற்படுதை அரசு தடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


