காங்கிரஸின் மத நல்லிணக்க வழிபாடு ஒத்திவைப்பு – செல்வப்பெருந்தகை!

K. Selvaperunthagai
Advertisements

மதுரை:

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா விவகாரம் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகப் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து இரு சமயத்தைச் சேர்ந்த மக்கள் திருப்பரங்குன்றத்தில் திரளுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மாலை சென்னை சத்திய மூர்த்திபவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு வழிபாடு நடத்த போவதாக அறிவித்தார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் தற்போது அமைதி நிலவும் நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகத் திருப்பரங்குன்றம் போலீசார் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியிடம் தொடர்பு கொண்டு சில தகவல்களைத் தெரிவித்தனர்.

அப்போது அவரிடம் பக்தர்களைத் தவிர மற்ற அமைப்பினர், கட்சியினர் திரண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவரும் மாநில தலைமைக்கு அதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரசாரின் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் மத நல்லிணக்க வழிபாடு ஒத்திவைக்கப்பட்டு, செல்வப்பெருந்தகையின் பயணமும் ரத்தாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *