
புதுடெல்லி:
புதிய யுஜிசி வரைவு விதிகளைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது,
மாநிலங்கள் இணைந்தது தான் இந்தியா என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
மாநிலங்களின் கலாச்சாரத்திற்கும், மொழிகளுக்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும். பல மொழிகள் ஒன்றிணைந்தது தான் இந்தியா எனும் தேசம்.
யுஜிசி மூலமாக மாநிலங்களின் உரிமையைப் பறிக்க முயற்சி. கல்வியை ஆர்எஸ்எஸ் மயமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.
இது போன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஏனெனில் அரசியலமைப்பை தகர்க்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் நமது மாநிலங்களைத் தகர்க முடியாது.
அவர்கள் நமது கலாச்சாரங்கள், நமது மரபுகள் மற்றும் நமது வரலாறுகளைத் தாக்க முடியாது என்றார்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் யுஜிசி வரைவு விதிகளைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.
