தமிழக அரசியலில் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு ஹாட் டாபிக் என்றால் அது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், அதன் மவுனமும்தான்! ஒரு பக்கம் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் தொடர்பான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும், தீவிரப் பிரச்சார வியூகங்களும் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், மறுபுறமோ மிக முக்கியமான ஒரு திருப்பம் அரங்கேறியுள்ளது. தவெக அமைச்சரவையில் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திமுகவுடனான பழைய உறவை ஓவர் நைட்டில் கழற்றிவிட்டுத் தவெக பக்கம் தாவியது காங்கிரஸ் கட்சி.
ஆனால், டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற மிக முக்கியமான ‘இந்தியா கூட்டணி’ கூட்டத்தில் கூட தவெக சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை. தேசிய அரசியலை விட, தமிழக அரசியலே தனக்கு முக்கியம் என்று விஜய் காட்டி வரும் இந்தத் தனித்து நிற்கும் போக்கு, காங்கிரஸ் மேலிடத்தையும், குறிப்பாக ராகுல் காந்தியையும் கடும் அப்செட்டுக்குள்ளாக்கியுள்ளது..
இதன் பின்னணி என்ன? தவெகவின் இந்த அமைதிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் வியூகம் தான் என்ன? இது பற்றிய பின்னணி தகவல்கள் குறித்து தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..!
தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் இப்போது ஒரு பெரிய பூகம்பம் வெடித்திருக்கிறது. அதுதான் தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில், தலைமை தேர்தல் ஆணையருக்கும் பிற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே கடுமையான கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் முடிவுகள் குறித்து, கடந்த 10 மாதங்களில் மற்ற தேர்தல் ஆணையர்கள் 14 முறை ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த உள் முரண்பாடு தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானேஷ்குமாரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் குரல் கொடுத்து வருகின்றன. இந்தப் பிரச்சனையை விவாதிக்கவும், அடுத்த கட்டமாக மத்திய அரசுக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கவும், டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மிக அவசரமாகக் கூட்டப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி மற்றும் அவரது குழுவினர் வந்திருந்தனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா (தாக்கரே அணி) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
ஆனால்,இந்தக் கூட்டத்தில் தான் மிகப்பெரிய ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.. தமிழக அரசியலில் திமுக கூட்டணியிலிருந்து விலகி, தவெகவை அரவணைக்க காங்கிரஸ் கட்சி எவ்வளவோ முயன்று வருகிறது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பிடிக்கும் என்றும், தேர்தலுக்காக திமுகவை ஓவர் நைட்டில் காங்கிரஸ் கழற்றிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. ஆனால், இவ்வளவு செய்தும் தவெக தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான எந்தப் பெரிய மூவ்-ம் வரவில்லை.
மோடிக்கு எதிராகவோ அல்லது பாஜகவை வெளிப்படையாகக் கண்டித்தோ விஜய் பெரிதாகக் குரல் கொடுக்காததும், இந்தியா கூட்டணியில் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து போக்கு காட்டி வருவதும் காங்கிரஸ் மேலிடத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்தப் பிரச்சினையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒத்த குரலில் கொந்தளித்து வரும் நிலையில், தவெக தரப்பிலோ அல்லது விஜய்யிடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்கப்படவில்லை..
சுவாரஸ்யமாக, இன்றைய இந்தியா கூட்டணி கூட்டத்தில் தமிழகத்திலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், விசிக தலைவர் திருமாவளவனும் கலந்துகொண்டு தங்களது நிலைப்பாட்டைப் பதிவு செய்தனர். (ஆம் ஆத்மி மற்றும் திமுக கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகக் களம் காணும் இந்தக் கூட்டத்தில், தவெக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகள் கைகோர்த்து வரும் வேளையில், தவெகவின் இந்தத் தனித்து நிற்கும் போக்கும், விஜய்யின் மவுனமும் பல சந்தேகங்களை எழுப்புகிறது. காங்கிரஸ் கட்சியோ தவெகவை நம்பி திமுகவை ஓரம்கட்டிய நிலையில்,
விஜய் தரப்பிலிருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டப்படாதது டெல்லி காங்கிரஸ் தலைமையை கவலைப்பட வைத்துள்ளது. வரும் தேர்தல்களில் தவெகவின் வியூகம் என்னவாக இருக்கும்? காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பை விஜய் பூர்த்தி செய்வாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


