உடனே ஜப்தி செய்யுங்கள் – ஐகோர்ட் மதுரை கிளை!

Advertisements

மதுரை:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஆண்டு எனக்குச் சொந்தமான வாகனம் மருத்துவ கழிவுகளைக் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளு மூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி என்ற கிராமத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டியதாக, அந்த ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் எனது வாகனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

எனவே பறிமுதல் செய்யப்பட்ட எனது வாகனத்தைத் திரும்ப ஒப்படைக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.

விசாரணை செய்த கீழமை நீதிமன்றம் எனது வாகனத்தைத் திரும்ப ஒப்படைக்க மறுத்து என் மனுவைத் தள்ளுபடி செய்தது, இது ஏற்கத்தக்கது அல்ல.

எனவே விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து எனது வாகனத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி மனுதாரர் வாகனம் விதி முறைகளை மீறிக் கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளைத் தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளது, இதை அனுமதிக்க முடியாது.

இது போன்ற வாகனங்களைத் திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது.

மேலும் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி இந்த வாகனங்களைப் பறிமுதல் செய்து ஏலம் நடத்து முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி புகழேந்தி, மருத்துவ கழிவுகளைக் கையாள்வதற்கு பல்வேறு சட்ட விதிகள் உள்ளது.

குறிப்பாக 75 கிலோ மீட்டர் தாண்டி மருத்துவக் கழிவுகள் கொண்டு போகக் கூடாது என்றும், மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் எனப் பல்வேறு சட்டவிதிகள் உள்ளது.

ஆனால் இதில் எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது தீவிரமான குற்ற செயலாகும்.

மேலும் உள்ளாட்சி சட்டவிதிகள்படி மருத்துவ கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி பண்ணுவதற்கான சட்ட விதிகள் உள்ளது. அதைச் செய்வதில்லை.

எனவே இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சித் துறை செயலர், ஆகியோரை நீதி மன்றம் தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி, இது போன்று விதிமுறை மீறி மருத்துவ கழிவுகளைக் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்வது குறித்து உரிய செயல்முறை வழிகாட்டுதல்களை அந்தந்த துறையினருக்கு செயலாளர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தைத் திரும்ப ஒப்படைக்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து வழக்கை நீதிபதி புகழேந்தி முடித்து வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *