பேஸ்புக் கட்டுரைக்கு கண்டனம்! மம்தா மோகன் தாஸ்.
பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன் தாஸ் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
இவர் விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘குரு என் ஆளு’, ‘தடையற தாக்க’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மம்தா மோகன் தாஸ் திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து படங்களிலிருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் குணமடைந்து விட்டதாக கூறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை மம்தா மோகன் தாஸ் குறித்து கீத்து நாயர் என்பவர் பேஸ்புக்கில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பொய்யாக எழுதப்பட்ட அந்த கட்டுரையை வாசித்த நடிகை மம்தா மோகன்தாஸ் அதிர்ச்சி அடைந்து அதன் கமெண்ட் பகுதியில் , “யார் நீங்கள்? என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா?” என்று பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, “தயவு செய்து இதுபோன்ற மோசடியான நபர்களின் பக்கத்தைப் பின் தொடராதீர்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். மம்தாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த நபரின் பேஸ்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.