ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே எஸ்.பி சுகுணா சிங் தெரிவித்தார்.
சென்னை: தீபாவளியையொட்டி, ரெயில்களில் பட்டாசு எடுத்து செல்ல கூடாது, மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு காவல்துறை மூலமாக பல அறிவுரைகள் வழங்கப்படுள்ளன. முக்கியமாக எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை ரெயில் நிலையங்களுக்கு கொண்டு செல்வதையோ, ரெயில் பெட்டிகளில் கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் ஆர்.பி.எப் மூலமாக அபராதம் விதிக்கப்படும்.
மேலும் பெண்கள், குழந்தைகள் ரெயில்களில் பயணம் செய்யும்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து வகையான ரெயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் கிரைம் போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் 25க்கும் மேற்பட்ட செல்போன்கள் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.