
நடைபயிற்சியின்போது மக்கள் அடிக்கடி செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன என்பதையும், அதற்கான தீர்வுகள் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நம்முடைய உடலை ஃபிட்டாக வைப்பதற்கு இருக்கக்கூடிய மிகவும் எளிமையான வழிகளில் ஒன்று நடைபயிற்சி. இதனைச் செய்வதற்கு எந்த ஒரு ஸ்பெஷல் சாதனமோ அல்லது ஜிம் மெம்பர்ஷிப்போ தேவையில்லை. ஒரு நபர் ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்ல ஆரோக்கியத்திற்கு உதவும் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. எனினும் அதனைச் சரியான வழியில் செய்யாவிட்டால் இந்த எளிமையான பயிற்சி கூட உங்களுக்கு ஆபத்தானதாக முடியலாம். அந்த வகையில் நடைபயிற்சியின்போது மக்கள் அடிக்கடி செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
கவன சிதறலோடு நடை பயிற்சி மேற்கொள்ளுதல், மொபைல் போன் பயன்படுத்துவது அல்லது வீடியோக்களைப் பார்த்துக் கொண்டு நடைபயிற்சியில் ஈடுபடுவது ஆகியவை, சுற்றுப்புற சூழலுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விழிப்புணர்வை குறைத்து, ஆபத்துகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே நடைபயிற்சியின்போது போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் இது நம்முடைய உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
உங்களுக்குப் பொருத்தம் இல்லாத ஷூக்களை அணிவதால் கால்களில் கொப்புளம், புண்கள் மற்றும் ஒரு சில நாள்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுடைய கால்களுக்குத் தகுந்த ஷூக்களை நீங்கள் அணியாவிட்டால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு உங்களுக்கு அசௌகரியம் ஏற்படும். எனவே உங்களுடைய நடைபயிற்சி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான காலணிகளை அணிவது மிகவும் முக்கியம்.
நடைபயிற்சி மேற்கொள்ளும்போது அதிலும் குறிப்பாக வெயில் காலத்திலோ அல்லது நீண்ட நேரத்திற்கு நடைபயிற்சி செல்லும்போது உங்களுடைய உடலுக்குத் தேவையான ஸ்டாமினாவை வழங்குவதற்கும், தசைகள் மீட்டமைப்புக்கு ஆதரவு தருவதற்கும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். ஆனால் உங்களுடைய உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால் அதனால் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டு, உடல் செயல்பாடுகள் சீராக நடைபெறாது. நீர்ச்சத்து குறைந்துவிட்டால் ரத்த ஓட்டம் குறைந்து, அதனால் உங்களால் நடைபயிற்சியின்போது முழு அர்ப்பணிப்பை கொடுக்க முடியாது. எனவே நடைபயிற்சி செல்வதற்கு முன்பும் நடைபயிற்சியை முடித்தபிறகும் தண்ணீர் குடிப்பது அவசியம்.
கால்களைத் தரையோடு இழுத்துக் கொண்டு நடப்பது அல்லது முதுகை வளைத்து முன்னோக்கியவாறு நடப்பது போன்றவை தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி உங்களுக்குச் சோர்வை கொடுக்கலாம். எனவே ஒருபோதும் கூன் விழுந்தவாறு நடப்பதை தவிர்த்து விடுங்கள். இது உங்களுடைய முதுகு மற்றும் மூட்டு பகுதியில் அழுத்தத்தை உண்டாக்கும். நேராக நிமிர்ந்து, தோள்பட்டை தளர்வாக வைத்து நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சியின்போது உங்களுடைய தோரணையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் உங்களுடைய தோரணை நேரடியாக உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் சரியான தோரணையை பின்பற்றாவிட்டால் அதனால் அசௌகரியம் மற்றும் நடைபயிற்சியில் உங்களுடைய முழு செயல்திறனை வெளிப்படுத்த முடியாமல் போகலாம். மேலும் இதனால் தொடர்ச்சியான கழுத்து வலி அல்லது கீழ் முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.


