
ஏடிஎம்-ல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை எடுக்கத் தவறினால், பணம் தானாகவே இயந்திரத்திற்குள் செல்லும் வகையில், ‘ரீடிராக்ஷன்’ வசதியை, ரிசர்வ் வங்கி மீண்டும் வழங்க அனுமதி வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.
ஏடிஎம்-ல் சில நேரங்களில் பணம் வரத் தாமதமாகும். இதனால், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை வெற்றி பெறவில்லை என்று கருதி, சென்றுவிடுகின்றனர். இதேபோல் சிலர், மறதி காரணமாகவும் பணத்தை எடுக்காமல் செல்வதுண்டு.
இதனால் பல்வேறு மோசடிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பணத்தை எடுக்காத நிலையில், பணம் மீண்டும் இயந்திரத்துக்குள்ளேயே சென்றுவிடும் வசதி, 2012க்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மோசடிகுறித்து தற்போது ரிசர்வ் வங்கிக்குப் புகார்கள் அதிகரித்து வருவதால், மோசடி நடைபெறக்கூடிய ஏ.டி.எம்-களை அடையாளம் கண்டு, அவற்றில் மட்டும், பணம் திரும்ப இயந்திரத்துக்குள் செல்லும் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கத் தவறியதாகக் கருதி, இயந்திரம் பணத்தை மீண்டும் உள்ளே கொண்டு போய்விடும். அதேநேரம் பணத்தை எடுக்காததாகக் கருதி, பதிவிட்ட மொத்த தொகையையும் வாடிக்கையாளர் கணக்கில் தானாகவே மீண்டும் வரவு வைக்கப்படும். இதன் மூலம், மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
ஏடிஎம் இல் பணம் மீண்டும் உள்ளே செல்லும் வசதி கடந்த 2012ல் நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின், ஒரு சில ஏ.டி.எம்.களை குறிவைத்து வேறு விதத்தில் மோசடிகள் நடைபெற்றன. இந்நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏ.டி.எம்-ல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை எடுக்கத் தவறினால், பணம் தானாகவே இயந்திரத்திற்குள் செல்லும் வகையில், ‘ரீடிராக்ஷன்’ வசதியை மீண்டும் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.


