
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக தேர்தல் என்றால் கோவை நகரம் பரபரக்க தொடங்கிவிடும். இப்ப, திமுக சார்பில் செந்தில் பாலாஜி கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இருக்காது.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு கோவை வடக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதரவாளர்கள் மிகப்பெரிய அப்செட்டில் உள்ளனர். இது கூட்டணியில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, தங்களுக்கு கோவையில் மட்டும் 3 தொகுதிகளை கேட்டது. வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்குத் தொகுதியும், அண்ணாமலைக்காக சிங்காநல்லூர், தொகுதியும், வசந்தராஜன் என்ற நிர்வாகிக்காக கிணத்துக்கடவு தொகுதியும் கேட்டனர்.
ஆனால் அதிமுக, கோவை வடக்கு தொகுதியை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கினர். இதனால் அதிமுகவினர் ஒரு பக்கமும், பாஜகவினர் ஒரு பக்கமும் கடும் அதிருப்தியில் உள்ளனர். கோவை வடக்கு தொகுதியைக் கைப்பற்ற வானதி சீனிவாசனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே உச்சக் கட்ட போட்டி நிலவி வருகிறது. பாஜக தமிழ்நாட்டு மேற்பார்வையாளர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்.
அதனால், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்றாங்க. எல்லாக் கட்சியின் வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரும், என்டிஏ கூட்டணிக்கே தலைமை தாங்கும் பாஜக தனக்கு ஒதுக்கபட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களும் இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
தேசிய கட்சிகளில் பொதுவாக நிறைய கோஷ்டிகள் இருக்கும். அதனால் தேர்தல் காலங்களில் இதுபோன்ற குழப்பங்கள் இருப்பது சகஜமானது என்றாலும், மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டதில்லை என்கின்றனர் அக்கட்சியின் அனுதாபிகள். அதுவும் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டே உள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று மக்களைச் சந்தித்து பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தொகுதியைப் பொறுத்தளவில் கட்சி சாராத வாக்காளர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இங்கே போட்டியிட கடந்த முறை கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு நடிகர் கமல்ஹாசனை சொற்ப வாக்குகள் வி்த்தியாசத்தில் வென்ற வானதி சீனிவாசன் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார். அதேமாதிரி முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இதேதொகுதியைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறார். இதற்கிடையே பாஜகவின் மாநகர் மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார் என்பவரும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளதாக சொல்றாங்க..
இவர்களில் யாருக்குத் தொகுதி கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸ் நீடிக்குது. ஏற்கனவே பிரதமர் மோடி கோவை வந்தபோது அவரை வரவேற்கும் லிஸ்டில் தனது பெயர் விடுபட்டதால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் இந்தத் தொகுதியை அண்ணாமலைக்கு ஒதுக்கவில்லை என்றால் தேர்தல் வேலை செய்ய மாட்டார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மேலும், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதரவாளர் ஒருவருக்கு கோவை வடக்குத் தொகுதி கிடைக்கும் என நினைச்சிருந்த நிலையில் அதிமுக தலைமையிடம் பிடிவாதமாக இந்தத் தொகுதியை கேட்டு வாங்கியுள்ளது பாஜக. பாஜகவுக்குக் இந்தத் தொகுதியைக் கொடுத்ததை ஜீரணிக்கவே முடியல, பாஜகவுக்கு தேர்தல் வேலை செய்யமுடியாது என்று அதிமுகவினர் சொல்வது மட்டுமல்ல, பாஜகவுக்கு எதிராக வேலை செய்வோம் என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர் வேலுமணி ஆதரவு அதிமுக நிர்வாகிகள்.
இந்தச்சூழலில், கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி, கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். கோவையில் ஜிடி நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா திட்டம் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளதாக பேட்டி கொடுத்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கோவையில் செயல்படுத்தியிருப்பதால் வடக்குத் தொகுதி உட்பட கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக எளிதாக கைப்பற்றும் என்று அதிரடியாக கூறியுள்ளார். தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்படும் செந்தில்பாலாஜி, அண்ணாமலை, வேலுமணி ஆகியோர் தங்கள் பலத்தை நிரூபிக்க பல்வேறு அதிரடி சம்பவங்களை நடத்திக் காட்டுவார்கள்.
அவர்களது ஆட்டம் கோவை மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை..



