4,800 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

சென்னை மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, சென்னை மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்கும் திட்டம் ரூ.410 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும், ரூ.1,000 கோடி செலவில் மதுரை மற்றும் கடலூர் மாநகராட்சிகளில் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் சாலைகள் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்றும், ரூ.2,400 கோடி செலவில் மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் சீரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வாழ்வாதாரத்திற்காகப் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் எனக் கூறினார்.

அப்போது, திமுக ஆட்சியை முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டியபோது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *