Sunita Kejriwal: 55 எம்எல்ஏக்கள், கெஜ்ரிவால் மனைவியுடன் சந்திப்பு; கெஜ்ரிவால், முதல்வராக நீடிக்க வலியுறுத்தல்!

Advertisements

புதுடெல்லி: டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் பீகார் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 55 எம்எல்ஏக்கள், இன்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை சந்தித்து சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவாலே தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் முதல்வர் கெஜ்ரிவாலும் கைது ஆனார்.

அமலாக்கத்துறை காவலில் இருந்த கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி, பின்னர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே முதல்வர் பதவியை வகித்து வரும் கெஜ்ரிவால் அங்கிருந்து அவ்வப்போது உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் தற்போதைய டெல்லி அமைச்சர்கள் சிலரையும் பாஜகவில் இணையும்படி அமலாக்க துறை மூலம் மிரட்டி வருவதாக அமைச்சர் அதிஷி இன்று காலை பக்கீர் தகவலை வெளியிட்டார்.

ஆனால் இதை மறுத்த பாஜக தலைவர்கள் டெல்லியில் முதல்வர் பதவி ஏற்பது யார் என்ற போட்டி ஆம் ஆத்மி கட்சியில் எழுந்து இருப்பதாகவும் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் கூறி வருகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாஜக தனக்கு தானே “ஆப்பு “வைத்துக் கொண்டதாக, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாஜக நினைத்தபடி கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாறாக, ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை டெல்லியில் அமல்படுத்தவும் பாஜக மேலிடம் தயங்குகிறது.

கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்கள் சிறையில் இருக்கும் நிலையிலேயே ஆம் ஆத்ம கட்சியின் இளம் தலைமுறை தலைவர்கள் அகில இந்திய அளவில் அனைத்து எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்களின் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி சாதனை படைத்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்தால் அது கெஜ்ரிவாலுக்கு அனுதாப ஆலையை மேலும் அதிகரித்து தேர்தலில் படுதோல்வி சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக முதல் அமைச்சர் யார் என்பதில் போட்டி என்பது போன்ற தகவல்கள் பாஜக சார்பில் கசிய விடப் படுகின்றன. ஆனால் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதை நிரூபிக்கும் வகையில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சியின் 55 எம்எல்ஏக்கள் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே முதல்வராக நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *