
சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வினாவிடை நேரம் நடைபெற்றது. அப்போது பேசிய கிள்ளியூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் செல்லச்சாமி, தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் துணை மின்நிலையம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசி சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த ஆண்டில் ஆறாயிரம் டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஒருநாளைக்கு 10 முறை மின்சாரம் தடைபடுவதாகக் குற்றம் சாட்டினார்.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், சொந்தக் காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு மின்தடை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.


