நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் பெண் மேலாளர் திசா சாலியன் மரணம் குறித்து சிபிஐ வழக்குப் பதிந்து விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு சிவசேனா ஆட்சிக்காலத்தில் மும்பையில் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் பெண் மேலாளர் திசா சாலியன் 14 மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதைத் காவல்துறையினர் தற்கொலை வழக்காகப் பதிந்தனர். இதையடுத்த ஆறு நாட்களில் சுசாந்த் சிங் ராஜ்புத்தும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதியப்பட்டது.
14ஆவது மாடியில் இருந்து தன் மகள் உடல் ஆடையின்றிக் கீழே விழுந்ததாகவும், அதனால் அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் திசாவின் தந்தை சதீஷ் சாலியன் தெரிவித்தார். இது தொடர்பாக அப்போதைய அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதனால் தன் மகள் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திசா சாலியன் மரணம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மூத்த அதிகாரியை நியமித்துப் புலனாய்வு செய்யவும், காவல்துறையினர் இது குறித்த ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
திசா சாலியன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது குறித்துக் கருத்துக் கூறிய அவர் தந்தை சதீஷ் சாலியன், உண்மை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

