
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்..
அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். அதன்பின் மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, மெட்ரோ ரயில் திட்டம், பிஎம்ஸ்ரீ கல்வி நிதி, மீனவர் பிரச்சினை, மேகதாது விவகாரம், நிலுவையில் உள்ள நிதிப் பகிர்வு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, பல்வேறு மத்திய அரசு திட்டங்களுக்கான மாநிலப் பங்குகள் விரைந்து விடுவிப்பு, காரிஃப் பருவ காலத்திற்குத் தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் விரைந்து விநியோகிப்பது உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்திக்க முதலமைச்சர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்தித்து துறை சார்ந்த கோரிக்கை கடிதங்களை வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பயணத்தின் இடையே காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


