
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மாநகராட்சியில் 1260 இடங்களில் பத்தாயிரம் பொதுக்கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காகத் தூய்மை இந்தியா திட்டத்தில் 620 கோடி ரூபாயும், இராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் பொதுக்கழிப்பறைகளைத் தனியார்மயமாக்க 430 கோடி ரூபாயும் என மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பொதுக்கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர்போன திமுக தனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் கழிப்பறையிலும் கொள்ளையடித்துக் கஜானாவை நிரப்பிக் கொள்ளத் துணிந்துள்ளது அருவருக்கத் தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும் என்றும் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



