
சென்னையில் பயங்கரம்! கார் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதலில், உடன்பிறந்த அண்ணனின் விரலையே கடித்துத் துண்டாக்கிய தம்பியின் வெறிச்செயல் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க வந்த அண்ணியையும் கடித்துக் குதறிய நிலையில், துண்டான விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த சோகம் அரங்கேறியுள்ளது.
பள்ளிக்கரணை, அமராவதி நகர், சாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் . இவரது தம்பி ராஜேஷ்குமார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டின் கீழ்தளத்தில் அண்ணன் தினேஷும், மேல்தளத்தில் தம்பி ராஜேஷ்குமாரும் குடியிருந்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாகவே சகோதரர்கள் இருவருக்கும் இடையே கார் நிறுத்துவது தொடர்பாகப் புகைச்சல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று மீண்டும் கார் நிறுத்துவதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றிப்போய் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி சகோதரர்கள் இருவரும் அடித்துக் கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், தனது அண்ணன் தினேஷின் வலது கை ஆள்காட்டி விரலை பலமாகக் கடித்தார். இதில் தினேஷின் விரல் பகுதி துண்டானது. தடுக்க வந்து தினேஷின் மனைவியின் விரலையும் கடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த தினேஷ், உடனடியாக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கே சிகிச்சை பெற்று வரும் தினேஷின் நிலை துண்டான விரலை ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத்,தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி ராஜேஷ்குமார் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கார் விடுவதில் ஏற்பட்ட தகராறில் தம்பியே அண்ணனின் விரலைக் கடித்து துண்டாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துண்டான விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அண்ணன் தினேஷ செய்வதறியாது உறைந்துபோய் அதிர்சியில் உள்ளார். உடன்பிறந்த சகோதரர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ மற்றும் கார் பார்க்கிங் மோதல், ஒருவரின் உடல் உறுப்பை இழக்கும் அளவிற்குச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அற்ப காரணங்களுக்காக ரத்த உறவுகளுக்குள் ஏற்படும் இத்தகைய மோதல்கள் சமூகத்தின் கசப்பான பக்கத்தைப் பிரதிபலிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ஒரு சிறு விவாதத்தைக் கையாளுவதில் ஏற்பட்ட நிதானமின்மை, இன்று ஒரு குடும்பத்தின் நிம்மதியையே சீர்குலைத்துள்ளது.



