சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிலையில் அதை மேயர் பிரியாவும் திமுக கவுன்சிலர்களும் புறக்கணித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகர், இராயபுரம் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளும் பங்கேற்று, அந்தந்தத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், திரு.வி.க.நகர் 74ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான மேயர் பிரியா உள்ளிட்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேநேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


