
சென்னை – பெங்களூர் இடையான விரைவு நெடுஞ்சாலை இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அப்போது பயண நேரம் இரண்டுமணி நேரமாகக் குறையும் என்றும் மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் பில்டு இந்திய இன்ப்ரா விருதுகள் வழங்கும் விழாவில் மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது சென்னைக்கும் – பெங்களூருக்கும் இடையே 260 கிலோமீட்டர் தொலைவுக்கு விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவருவதாகவும், அதன் ஒருபகுதியில் இப்போதே போக்குவரத்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து முழுப் பாதையும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அப்போது சென்னை – பெங்களூர் இடையான பயண நேரம் இரண்டு மணி நேரமாகக் குறையும் என்று நிதின் கட்கரி குறிப்பிட்டார்.


