
தமிழகத்தின் 12 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 970 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இது மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27ஆம் நாள் காலை தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுவடையும். அதன்பின் வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து அக்டோபர் 28ஆம் நாள் தீவிரப் புயலாக வலுப்பெறக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது மேலும் வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக அக்டோபர் 28ஆம் நாள் மாலை முதல் இரவுக்குள் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 27ஆம் நாள் சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 28ஆம் நாள் இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 14 செண்டிமீட்டரும், நாலுமுக்கில் 13 செண்டிமீட்டரும், காக்காச்சியில் 11 செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


