திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அதிகாலையிலிருந்து நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தொடர் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அதன்படி, சனி, ஞாயிறு அரசு விடுமுறையான கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது.அதன்படி, நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது.

மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வரிசை விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால், பெரிய தெரு பேகோபுர தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. எனவே தேரடி வீதி மற்றும் கடலைக்கடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கோயிலுக்கு வந்த வாகனங்களால் நெரிசல் காணப்பட்டது.மேலும் ஆடிப்பூரம் உற்சவத்தின் 2ம் நாளான நேற்று விநாயகர், பராசக்தி அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *