
புதுச்சேரியில் மது போதையில் மயங்கிக் கிடந்த நபரின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை திருடிச் சென்ற ஆட்டோ டிரைவரை 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான வானூர்- பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விஸ்வநாதர் என்பவர், மேட்டுப்பாளையம் சாராயக்கடை அருகே அளவுக்கு அதிகமாகச் சாராயம் அருந்திவிட்டு நிலை தடுமாறி மயக்கத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் தனது கழுத்தில் இருந்த தங்க செயின் மற்றும் பணத்தை திருடிச் சென்றதாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சாராயக்கடை அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது புதுச்சேரி கோவிந்தன்பேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருள்குமார்(எ) முத்தழகன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அருள்குமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க செயின் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

