Same-Sex Marriage: அதிரடி உத்தரவு!

Advertisements

தன்பாலின திருமண விவகாரத்தில் அதிரடி உத்தரவு!

மருவிய பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என்று  தன்பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 10 நாள்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த மே 11ஆம் தேதி, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி. எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பை வழங்கிய டி. ஒய். சந்திரசூட், “சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும். நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நுழையாமல் இருப்பதில் நீதிமன்றம் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுப்பதன் ஒரு பகுதியாகும்.

சிலர் இதைத் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாகக் கருதலாம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ஆவது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை ஆகியவற்றின் அடிப்படையுடன் தொடர்புடையது. தன்பாலின தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டம் கருத முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும். எனவே, தத்தெடுப்பு விதிமுறைகள் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளது. தன்பாலின தம்பதிகளுக்குப் பாகுபாடு காட்டுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்பாலீர்ப்பு தம்பதிகளுக்குச் செல்லும் பலன்கள், உதவிகள் ஆகியவை தன்பாலின தம்பதிகளுக்கு மறுக்கப்பட்டால் அது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். தனிச்சட்டம் உள்பட தற்போதுள்ள சட்டங்களின்படி, எதிர்பாலீர்ப்பு உறவுகளில் மருவிய பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது. பால்புதுமை தம்பதிகள் உள்பட திருமணம் செய்து கொள்ளாத தம்பதிகளும் குழந்தையைத் தத்தெடுக்க உரிமை உள்ளது” என்றார்.

மேலும், பால்புதுமை சமூகத்திற்கு எதிராக மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பாகுபாடு காட்டக் கூடாது என இந்திய தலைமை நீதிபதி அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *