ஜகார்த்தா, ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில்இடம்பெற்ற நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
புருனே, கம்போடியா,இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அடங்கியது, ஆசியான் அமைப்பு.ஆசியான் – இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நேற்று நடந்தது.இதில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இதற்கிடையே, இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சரான இந்தியாவை பூர்வீகமாக உடைய விவியன்பாலகிருஷ்ணனை சந்தித்து ஜெய்சங்கர் பேசினார்.புருனே, இந்தோனேஷியா, தாய்லாந்து, தென்கொரியா, நியூசிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர்களை அவர் நேற்று சந்தித்தார்.முன்னதாக நேற்று முன்தினம், இந்தோனேஷியா, மலேஷியா, ஆஸ்திரேலியா,வியட்நாம் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.நிதிதொழில்நுட்பம்,உணவுப் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்புகளின் போது பேசப்பட்டது.