
தேசியக் கல்விக் கொள்கைப்படி அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் சாதாரணக் கல்விச் சீர்திருத்தம் அல்ல என்றும், அது மொழித் திணிப்பை நோக்கிய, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சி என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து ஆறாம் வகுப்பில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களில் இந்தியைக் கட்டாயமாக்கியுள்ளதைப் போல், இந்தி பேசும் மாநிலங்களில் மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? என்றும் வினவியுள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத மத்திய அரசு, இந்தி பேசும் மாணவர்களுக்குச் சலுகைகளை அளித்து, உயர்கல்வி வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மும்முரமாக இந்தியைத் திணிக்கும் செயல், கூட்டாட்சியியலுக்கு எதிரானது என்றும், கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை அவமதிப்பதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.




