தமிழ்நாட்டில் நிலவும் வறட்சியைக் கருத்திற்கொண்டு காவிரியில் உடனடியாக 11 டிஎம்சி தண்ணீர் திறக்கக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரைக் கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இதனால் குறுவைப் பட்டத்தில் நெல் பயிரிடுவதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதேபோல் இப்போது வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துள்ளதால் சம்பாப் பட்டத்திலும் நெல் பயிரிடுவதற்குத் தண்ணீர் இல்லை. தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் காவிரியில் 11 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்திருந்தது.
அதில் ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 11 டிஎம்சி நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எத்தனை மனுக்களைத் தான் தாக்கல் செய்வீர்கள் எனக் கடிந்துகொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

