
மேகேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்துத் திருச்சியில் விவசாயிகள் கழுத்து வரை மணலில் புதைந்தும், அரையளவுத் தண்ணீரில் நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிமையுள்ள நீரைக் கர்நாடக அரசு இன்னும் திறந்து விடவில்லை. இதனால் ஆண்டுதோறும் குறுவைப்பட்ட நெல் பயிரிடுவதற்குத் தண்ணீர் திறந்துவிடும் ஜூன் பன்னிரண்டாம் நாளில் இன்று மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையிலும் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்னுமிடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக அரசைக் கண்டித்துத் திருச்சி காவிரியாற்றில் தேசியத் தென்னிந்திய ஆறுகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மணலில் கழுத்தளவு புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அரையளவு தண்ணீரில் நின்றுகோண்டு மேகேதாட்டில் அணை கட்டக் கூடாது, உழவர்களைக் காப்போம் என்று கூறி முழக்கமிட்டனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஐயாக்கண்ணு, கடந்த காலங்களில் கர்நாடக அரசு காவிரியிலும் அதன் துணையாறுகளிலும் பல்வேறு அணைகளைக் கட்டி, அதன் பாசனப் பரப்பைக் குறிப்பிடத் தக்க அளவில் விரிவாக்கியுள்ளதாகக் கூறினார். மேகேதாட்டில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள 6 இலட்சம் ஏக்கர் பாசனப்பரப்பும் தண்ணீரின்றி வறண்டுபோகும் எனத் தெரிவித்தார். இந்தச் சிக்கலில் அரசு தலையிட்டு உழவர்களின் நலன்களைக் காக்கவில்லை என்றால் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஐயாக்கண்ணு கூறினார்.


