
ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிணறுகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப்பதற்றம் நிலவுகிறது. ஈரான் மீது நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடங்கியது. தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் இது என அறிவித்த இஸ்ரேல், இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிட்டு தாக்குதலில், ஈடுபட்டது.
இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக 100-க்கு மேற்பட்ட டிரோன்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து ஈரான் இஸ்ரேல் மீது செலுத்தியது. இப்படி இஸ்ரேலும், ஈரானும் தங்கள் தாக்குதலை தொடர்வதில் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தின் தகவல்படி, டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈரானிய ஆட்சி அணு ஆயுதத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றதாகவும், ஈரானிய ஆட்சி அதன் அணு ஆயுதக் காப்பகத்தை மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.



