
ஹைதராபாத்தில் திருமணம் செய்வதற்காக டிவி தொகுப்பாளரை கடத்திய பெண் தொழிலதிபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திரிஷ்னா வயது(31) என்ற பெண் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனியல் இணையதளத்தில் டிவி தொகுப்பாளர் ஆகப் பணிபுரியும் பிரணவ் என்பவர்குறித்த தகவல்களைத் திரிஷ்னா பார்த்திருக்கிறார்.
அப்போது திரிஷ்னாவுக்கு பிரணவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. இதையடுத்து, பிரணவ் மனதில் இடம் பிடிக்க, அவருடன் திரிஷ்னா சாட்டிங் செய்து வந்துள்ளார்.
ஆனால், சைதன்ய ரெட்டி என்பவர் தான் பிரணவ் புகைப்படத்தை, மேட்ரிமோனியல் இணையதளத்தில், தனது விவரப்பக்கத்தில் வைத்து ஏமாற்றி வந்தது திரிஷ்னாவுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட டிவி தொகுப்பாளர் பிரணவை,தேடி கண்டுபிடித்த திரிஷ்னா, அவரது மொபைல் நம்பரையும் வாங்கி தொடர்பு கொண்டார். ஆனால் பேச விரும்பாத பிரணவ் , திரிஷ்னாவின் நம்பரை பிளாக் செய்துவிட்டார்.
ஆத்திரம் அடைந்த திரிஷ்னா 4 பேரை நியமித்து அவர்களுக்கு 50 ஆயிரம் பணம் தருவதாகக் கூறி, டிவி தொகுப்பாளரை கடத்துவதற்காக அனுப்பி வைத்தார். அவர்கள் திரிஷ்னாவின் அலுவலகத்திற்கு பிரணவை கடத்தி வந்தனர்.
அங்கு வைத்துத் திரிஷ்னா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் டிவி தொகுப்பாளர் மறுத்ததால் அவரை அடித்து உதைத்தனர். அவர்களிடம், பிரணவ் இனி திரிஷ்னாவின் மொபைல் போன் அழைப்பு வந்தால் எடுத்துப் பேசுவதாகப் பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பித்து வந்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திரிஷ்னா மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

