Suicide: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!

Advertisements

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் சாலையில் உள்ள ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். 65 வயதான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா (55). இவர்களுக்குத் தியா காயத்ரி (25) என்ற மகள் இருந்தார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களின் சொந்த ஊர் கேரளா.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி காயத்ரிக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தீட்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமானதும் இருவரும் பெங்களூருவில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் திருமணமான ஒரு மாதத்திலேயே கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கோபித்துக் கொண்டு காயத்ரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. திருமணமான ஒரு மாதத்திலேயே தனது மகள் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிற்கு வந்தது பெற்றோருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இதனால் மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் 3 பேரும் கடந்த 21-ந் தேதி கேக்கில் விஷத்தைத் தடவி அதைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை செய்யும் முன்பு கணேசன் கோவையில் உள்ள தம்பியைத் தொடர்பு கொண்டு மகளின் நிலைகுறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்ததாகவும், அதன்பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.  இதையடுத்து கணேசனின் தம்பி அண்ணனின் செல்போனுக்கு பல முறை அழைப்பு கொடுத்தும் அவர் எடுக்காததால் சந்தேகத்தில், நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டிக்கிடந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் பிணமாகக் கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து உடனே கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு சடலமாகக் கிடந்த கணேசன், விமலா, காயத்ரி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *