Sheikh Hasina:வங்தேச பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியபிறகு நடந்த வன்முறையில் 100க்கு மேற்பட்டோர் பலி!

வங்காள தேசத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர் வன்முறை ஏற்பட்டது.

டாக்கா:வங்காள தேசத்திலிருந்து ஷேக் ஹசீனா வெளியேறியபிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வங்காள தேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ விமானம்மூலம் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர் லண்டன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே வங்காள தேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வங்காள தேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தநிலையில் ஹேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியபிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இந்துகோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டாக்காவில் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் சென்று சூறையாடினர். ஹசீனாவுக்கு சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அந்த நாட்டு மந்திரிகள், எம்.பி.க்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. நேற்று மட்டும் வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.முன்னதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 119 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது வரை வங்காள தேச வன்முறையில் 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை 37 உடல்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.நேற்று இரவு, ஜனாதிபதி முகமது சஹாபுதீன் அனைத்து அரசியல் கட்சிகளையும் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் மற்றும் அரசு சொத்துக்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், வங்காள தேசத்தில் இன்று காலை அமைதி திரும்பி உள்ளதாகவும் பஸ்கள், வாகனங்கள் போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளதாகவும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வாகனங்கள் அலுவலகத்திற்கு செல்வதாகவும் அந்நாட்டு இணைய ஊடகமான பிடிநியூஸ்24 செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தேசிய தலைநகரில் உள்ள கல்வி நிறுவனங்கள் குறைவான வருகையைக் கண்டதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *