
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் விருத்தபுரீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 900 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்று வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளைத் தீரத்துடன் தழுவி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6ம் தேதி தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியது. அன்று முதல் ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற போட்டிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் சந்திரசேகர்மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 900 காளைகளும் 300 காளையர்கள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிகட்டு பல்வேறு சுற்றுகலாக நடைபெறவுள்ளது. வாடிவாசலிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டித் தழுவி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகளைத் தழுவிய காளையர்களுக்கும் காளைகளின் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும், தங்க காயின், ஹெல்மெட், நாற்காலி, சில்வர் பாத்திரங்கள், பேன், மிக்ஸி, குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டது. அதேபோல் காளையர்களும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே காளைகளைத் தழுவ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறை கால்நடைத்துறை வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

