Brazil X:ஒரு வழியாக முடிவுக்கு வந்தது ‘எக்ஸ்’ தளபிரச்சனை..கிரீன் சிக்னல் கொடுத்தது சுப்ரீம் கோர்ட்டு!

Advertisements

பிரேசிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

பிரேசிலியா:பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலது சாரி முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறைமீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லுலா டா சில்வா ஜனாதிபதியாகப் பதவியேற்பதை தடுக்க போல்சனாரோ சதிச்செயலில் ஈடுபட்டாரா எனப் பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே சமயம், சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டாரெனப் பிரேசில் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் குற்றம் சாட்டினார்.

மறுபுறம், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் விமர்சித்தார். அதோடு, பிரேசிலில் ‘எக்ஸ்’ தளம்மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள ‘எக்ஸ்’ அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் ‘எக்ஸ்’ சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் ‘எக்ஸ்’ தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் ‘எக்ஸ்’ தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து, பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்படி 24 மணி நேரத்திற்குள் ‘எக்ஸ்’ தளத்தைப் பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் உத்தரவிட்டார்.

மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் ‘எக்ஸ்’ செயலியைத் தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என்.(VPN) மூலம் ‘எக்ஸ்’ செயலியைப் பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரேசிலில் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு எக்ஸ் வலைதளம்மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. பிரேசிலிய சட்டங்களுக்கு இணங்க ஒப்புக்கொண்டு எக்ஸ் நிறுவனம் 5.1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 கோடி) அபராதம் செலுத்திய பிறகு தடையை நீக்குவதற்கான முடிவுக்குச் சுப்ரீம் கோர்ட்டு வந்துள்ளது. மேலும், பிரேசிலின் டெலிகாம் ரெகுலேட்டரான அனடெல், அதன் 2 கோடி பயனர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவையை மீட்டெடுப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *