த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் காலனியிலுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதை சென்னை காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் வாலிபர் ஒருவர் பேசியபோது முதலமைச்சர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் அவரது வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி விட்டு அலைபேசியைத் துண்டித்து விட்டார்.
பின்னர் மிரட்டல் விடுத்த நபரின் எண்ணை வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முதலமைச்சரின் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. பின்னர் முதலமைச்சரின் வீடு உள்ள சித்தரஞ்சன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து நீலாங்கரையிலுள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள். பின்னர் நீலாங்கரை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்துள்ளது.
