
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகிற மார்ச் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் தான் இருக்கின்றன
இந்த சூழ்நிலையில் திமுக அதிமுக நாம் தமிழர் தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு கட்சிகளும் இப்பொழுதே வேட்பாளர்களை தேர்வு செய்ய தொடங்கிவிட்டன.ஒவ்வொரு கட்சியும் தனித்தனி ஆலோசனை குழுக்களை அமைத்து திரை மறைவில் வேட்பாளர் பட்டியல்களை தயாரித்து வரும் சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது..
இது தொடர்பாக பாஜக மேல் இட தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என தெரிகிறது.இந்த சூழ்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் பாரதிங ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது யார் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து தமிழக பாரத ஜனதா கட்சி மட்டுமல்லாமல் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாகவும் வேட்பாளர் தேர்வு நடைபெற்று இருக்கிறது.
பெரும்பாலும் சாதிவாரியாக வேட்பாளர்களை நிறுத்தினால் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அந்த தனியார் நிறுவனம் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்துள்ளது.இது தவிர 25 தொகுதிகளில் யார் யாரை வேட்பாளர்களாக நிருத்தலாம் என்ற பட்டியலும் தரப்பட்டுள்ளது தற்பொழுது அமித்ஷா கையில் இருக்கும் இந்த பட்டியல் குறித்து வருகிற பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
அந்த வகையில் 25 தொகுதிகளில் போட்டியிட காத்திருக்கும் பாஜக வேட்பாளர் பட்டியலை ஜெம் தொலைக்காட்சி முதன்முதலாக வெளியிடுகிறது.சென்னை தி.நகர் தொகுதியில் வினோத் பி செல்வம் போட்டியிடுகிறார் அண்ணா நகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி துணை தலைவர் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார் வேளச்சேரி தொகுதியில் எஸ்.ஜி சூர்யா போட்டியிடுகிறார்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.தென் மாவட்டங்களை பொருத்தவரையில் மதுரை தெற்கு தொகுதியில் சௌராஷ்ட்ரா இனத்தைச் சேர்ந்த கே கே சீனிவாசன் போட்டியிடுகிறார் இவர் முன்னாள் பாஜக மாவட்ட தலைவராக பணியாற்றியவர்.
இதேபோல் மதுரை வடக்கு தொகுதியில் முக்குலத்தோர் ஆதரவு பெற்ற திருமாறன் ஜி போட்டியிடுகிறார். திருநெல்வேலி தொகுதியில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதியில் நாடார் இனத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுகிறார் இதேபோல் நாகர்கோவில் தொகுதியில் நாடார் இன செல்வாக்கு பெற்ற எம் ஆர் காந்தி போட்டியிடுகிறார்.
கிணத்துக்கடவு தொகுதியில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏபி முருகானந்தம் போட்டியிடுகிறார் ஈரோடு கிழக்கு அல்லது மொடக்குறிச்சி தொகுதியில் ஜிகே நாகராஜன் போட்டியிடுகிறார் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஏசி சண்முகத்திற்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது கே.வி குப்பம் தொகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இதேபோல் ராசிபுரம் தொகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த விபி துரைசாமிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அல்லது தென்காசி தொகுதியில் நடிகர் சரத்குமார் போட்டியிடுவார் என தெரிகிறது பேராவூரணி தொகுதியில் கருப்பு முருகன் தேர்தல் களத்தில் குதிக்கிறார் . பரமக்குடி தொகுதியை பொருத்தவரையில் தேவேந்திர குல வேளாளர் ஆதரவு பெற்ற பொன் பாலகணபதி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். வட மாவட்டங்களை பொருத்தவரையில் நெய்வேலி தொகுதியில் வன்னியர் செல்வாக்கு பெற்ற அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆன அண்ணாமலை விருப்பப்பட்ட தொகுதியில் நிற்கலாம் என்றும் பாஜக மேலிடம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.இந்த வேட்பாளர் பட்டியல் வெளியே கசிந்துள்ள நிலையில் பல தொகுதிகளில் போட்டியாளர்களும் கிளம்பி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் நைனார் நாகேந்திரனிடம் தங்களுக்கு தொகுதி ஒதுக்கி தரப்பட வேண்டும் என சிபாரிசு செய்து வருகின்றனர். இதற்கிடையே சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியிலும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது. சாதி ஒழிக என்று பேசி வரும் நாம் தமிழர் சீமான் இந்த முறை சாதி ரீதியில் வேட்பாளர்களை முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த ஜாதிகள் அதிகம் இருக்கிறதோ அது தொடர்பாக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திட்டமிட்டு 234 தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளர்களை தெரிவு செய்து விட்டார். வருகிற பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டில் 117 ஆண் வேட்பாளர்கள் 117 பெண் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்கிறார் இதில் பிராமண குலத்தைச் சேர்ந்த ஐந்து பெண் வேட்பாளர்களும் இடம் பெறுகிறார்கள்.
திமுகவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று வேட்பாளர்கள் சிபாரிசு செய்யப்பட்டு அவர்கள் குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதேபோல் அதிமுக தரப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் தலைமையில் ஒரு குழு வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்து வருகிறது.
திமுக அதிமுக ஆகிய கட்சிகளை பொறுத்தவரையில் தலா ஒவ்வொரு வேட்பாளரும் பத்து கோடி ரூபாய் அளவில் செலவிட தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இதேபோல் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான ஒரு குழு இந்த வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் கிடைக்கவில்லை என தெரிகிறது . இருந்த போதிலும் நீண்ட காலமாக விஜய் நற்பணி மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு தரலாம் என்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை தமிழக வெற்றி கழகமே ஏற்றுக் கொள்ளும் என்றும் பேசப்படுகிறது.



