
பீகாரில் ஐக்கிய ஜனதாதளச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தனக்கு வாய்ப்பளிக்கக் கோரி முதலமைச்சர் நிதிஷ்குமார் வீட்டுமுன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கோபால்பூர் தொகுதியில் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த கோபால் மண்டல் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தனக்கு வாய்ப்புக் கிடைக்குமோ என்கிற ஐயத்தில் அவர் முதலமைச்சர் நிதிஷ்குமாரைச் சந்திக்க வந்துள்ளார்.
சந்திக்க அனுமதிக்காததால் அவர் நிதிஷ்குமார் வீட்டு வாயில் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேர்தலில் போட்டியிடத் தனக்கு வாய்ப்பளிக்காவிட்டால் இங்கிருந்து செல்ல முடியாது என்று அவர் கூறினார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.



