jharkhand election:கூட்டணியா, தனித்தா! சஸ்பென்ஸ் வைக்கும் சிராக் பாஸ்வான்!

ராஞ்சி; ஜார்க்கண்ட் தேர்தலில் கூட்டணியா? தனித்தா? என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான நிலைமைகளை ஆய்வு செய்யத் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஜார்க்கண்ட் சென்றனர். அரசியல் கட்சிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களுக்கும் அவர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இறங்கி இருக்கின்றன. தேர்தல் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் ராஞ்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;

ஜார்க்கண்ட் தேர்தல் வருவதற்குள் கட்சியைப் பலப்படுத்துவது குறித்த செயல்களில் இறங்கி இருக்கிறோம். கட்சியின் கூட்டத்தில் தேர்தலில் கூட்டணியா, தனித்தா என்பது குறித்து முடிவு செய்யப்போகிறோம். கட்சியை வலுப்படுத்தப் பல இடங்களில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

பாலமு, தன்பாத், ஜாம்ஷெட்பூர் எனப் பல இடங்களில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து எந்தத் திசையில் நாங்கள் பயணிக்க வேண்டும் என்பதை கட்சி முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.அவரது கட்சி, மத்தியில் பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *