
விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் விசாரணைக்கு வரும்படி ராகுல்காந்திக்கு உத்தரப் பிரதேச நீதிமன்றம் அனுப்பிய சம்மனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிசாருடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதாகவும், இதற்காக அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்ததாகவும் ராகுல்காந்தி பேசியிருந்தார்.
இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ நீதிமன்றம், ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த சம்மன் அனுப்பியதை ரத்துச் செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி முறையிட்டார். முறையீட்டை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் வித்தியார்த்தி, அதைத் தள்ளுபடி செய்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி சார்பில் முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திபங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அமர்வு, ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பிய உத்தரவை நிறுத்தி வைத்தது.
அத்துடன் இனி எதிர்காலத்தில் இதுபோன்று அவதூறாகப் பேசக் கூடாது என்றும், மீறிப் பேசினால் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.



