மோடியும், அமித்ஷாவும், பீகாருக்கு என்ன செய்தார்கள்? – காங்கிரஸ் MP பிரியங்கா கேள்வி..!

கடந்த 20 ஆண்டுகளாக, நரேந்திரமோடியும், அமித்ஷாவும், பீகாருக்கு என்ன செய்தார்கள் என்பதை முதலில் கூற வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சஹஸ்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, பிரதமர் தேவையற்ற விஷயங்கள் குறித்து பேசுகிறார், ஆனால் பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின், அரசின் ஊழல் மற்றும் தவறான ஆட்சி பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்றும், தேர்தல்களின்போது பீகாருக்கான நன்கொடைகளை அறிவிப்பதற்கு முன்பு, நரேந்திரமோடியும், அமித்ஷாவும் கடந்த 20 ஆண்டுகளாக, பீகார் மாநிலத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை முதலில் கூற வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா தெரிவித்தார்.

மேலும், வேலைவாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் பீகார் மாநிலத்தை விட்டு, வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், பா.ஜ.க.வின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *