SIR விவகாரத்தில் தி.மு.க. நாடகம் நடத்துவதாக எல்.முருகன் விமர்சனம்.!

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப தி.மு.க. நாடகம் நடத்துகிறது என்று மத்திய பா.ஜ.க.இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டம் நடைபெறுவதாக கூறி, இதற்கு எதிராக போராடிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று சென்னை தியாகராய நகரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப தி.மு.க. அரசு நாடகம் நடத்துகிறது என, மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தல் நடைபெற ஆறு மாதங்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முன் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட வேண்டும் எனவும், உண்மையான வாக்காளர்கள் விடுபடக்கூடாது.

அதே நேரத்தில் போலி வாக்குகள், நகல் வாக்குகள் மற்றும் இறந்தவர்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, எஸ்.ஐ.ஆர்.-ஐ புதுப்பிப்பது காலத்தின் தேவை என்றும் எல்.முருகன் தெரிவித்தார். மேலும், வாக்காளர்களின் பெயர்களை, அவர்களின் அனுமதியின்றி தேர்தல் ஆணையம் எவ்வாறு நீக்க முடியும் என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *