திருமண கோலத்தில் ஐயப்பன்! ஆரியங்காவு ஐயப்பன் கோவில்.
சுவாமி ஐயப்பனின் அறுபடைவீடுகளில் சபரிமலைக்கு பிறகு முக்கியமானதாகக் கருதப்படுவது ஆரியங்காவு ஐயப்பன் கோவில் தான். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய கோவில் ஆரியங்காவு கோவில் தான். ஆசிரம தர்மபடி குளத்துபுழையில் பாலகனாக “பிரமச்சார்ய நிலை”யிலும், ஆரியன்காவில் திருமண கோலத்தில் “கிரகஸ்தாஸ்ரம” நிலையிலும், அச்சன்கோவிலில் “வானப்பிரஸ்த” நிலையிலும் சபரிமலையில் “சந்நியாசி” கோலத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தனிச்சிறப்பு:
* ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.
* ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்ட திருமண மேடை இங்கு அமைந்துள்ளது.
* கேரள முறைப்படி அமைந்த கோவிலில் தமிழக முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.
துயரங்கள் போக்கும் கார்த்திகை அமாவாசை 2022 எப்போது? எப்படி விரதம் இருக்க வேண்டும்?
திருமண கோலத்தில் ஐயப்பன்:
தல வரலாறு:
மதுரையை சேர்ந்த செளராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்குத் தேடையான துணிகளை நெய்து கொடுக்கச் சென்றனர். அந்த வியாபாரிகளில் ஒருவர் ஆரியங்காவு கணவாய் வழியாகச் சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், ஆரியங்காவு சாஸ்தா கோவில் மேல்சாந்தியின் இல்லத்தில் தனது மகளை விட்டுச் சென்றார். தான் திரும்பி வரும்போது மகளை அழைத்துச் செல்லதாகக் கூறி விட்டு, திருவிதாங்கூர் சென்றுள்ளார்.
புஷ்கலா, தன்னால் ஆன காங்கரியங்கைளச் சாஸ்தாவிற்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவு செய்தார். திருவிதாங்கூர் சென்று விட்டுத் திரும்பிய வியாபாரியை மத யானை ஒன்று துரத்தியது. அப்போது இளைஞன் ஒருவன் தோன்றி, யானையை அடக்கி, வியாபாரியைக் காப்பாற்றினார். அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, உனக்கு என்ன வேண்டும் என அந்த இளைஞனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவன், உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தருவீர்களா எனக் கேட்டுள்ளார்.
அதற்கு வியாபாரி சம்மதம் சொன்னதும், அந்த இளைஞன் மறைந்து போனதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் வியாபாரி. ஆரியங்காவு வந்து கோவிலுக்குச் சென்ற வியாபாரி, தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி தருவதை கண்டு உள்ளம் உருகி, நீயா என் மகளை ஆட்கொள்ள வந்தாய்? என அதிசயித்தார். பிறகு தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரிகளிடன் பேசித் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் தானே நேரில் வந்து புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்தத் திருமண கோலத்துடனேயே இவ்வாலயத்தில் ஐயப்பன் காட்சி தருகிறார்.
பெண் வீட்டாருக்கு சம்பந்தி விருந்து:
மார்கழி மாதத்தில் இத்தலத்தில் ஐயப்பன் – புஷ்கலா திருமணம் நடைபெறுகிறது. அந்தச் சமயத்தில் மதுரையிலிருந்து செளராஷ்டிர இனத்தவர்கள் தங்கள் குல பெண்ணுக்குச் சீதனம் எடுத்து வந்து திருக்கல்யாணத்தை நடத்துகின்றனர். திருமண சமயத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 3 நாட்கள், பெண் வீட்டாருக்கு சம்பந்தி விருந்தளிக்கும் முறை தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
சாஸ்தா, ஆரியங்காவு பெயர் காரணம் :
சாஸ்தா என்ற சொல்லைச் சாத்தன் என்றும் கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். சாத்து என்றால் கூட்டம். காட்டிற்குள் இருக்கும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டமாக வழந்து வழிபடுவதால் சாஸ்தா என்ற பெயரால் வழங்கப்படுகிறார். சிலர் அய்யனார் தான் சாஸ்தாவாக மாறி உள்ளதாகக் கூறுகின்றனர். ஐயன் என்றால் தலைவன் என்றும், தலைசிறந்தவன் என்றும் பொருள். ஆரியன் என்ற சொல்லுக்கு உயர்ந்தவன் என்றும், காவு என்றால் சோலை என்றும் பொருள். உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை என்பதால் இதற்கு ஆரியங்காவு என்னும் பெயர் வந்துள்ளது.
கோவில் அமைப்பு:
ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேரள கட்டிட கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குச் சடங்குகளும், பூஜைகளும் தமிழக முறையில் நடத்தப்படுகிறது. மூலஸ்தானத்தில் பார்வதி, லிங்க வடிவில் சிவன் ஆகியோருடன், திருமண கோலத்தில் புஷ்கலாவுடன் ஐயப்பன் காட்சி தருகிறார். நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர்.
கோவில் சிறப்பு :
இத்தலம்,”மூர்த்தி”, “ஸ்தலம்”, “தீர்த்தம்’ என்ற மூவகையிலும் பெருமை வாய்ந்த திருக்கோவிலாகும். மதகஜ வாஹன ரூபனாக (மத யானையை அடக்கிய கோலம்) தர்மசாஸ்தா காட்சி தருகிறார். கருப்பா நதி என்ற நதிக்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. ஐயப்பன் கோவில்களில் இக்கோவில் மட்டுமே திருக்கல்யாண மண்டபம் உள்ளது. திருக்கல்யாண தினத்தன்று “சப்பர புறப்பாடு” நடைபெற்று மாலை மாற்றும் நடைபெறுகிறது.
விழாக்கள்:
சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே இங்கும் விழாக்கள் நடத்தப்படுகிறது. மார்கழி மாதத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பிரார்த்தனை:
திருமணத்தடை, அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இங்குள்ள ஐயப்பனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்றப் பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
கோவில் அமைவிடம்:
கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கொல்லத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது.திருவனந்தபுரம்-தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கிமீ தூரத்தில் உள்ளது.