Milkha Singh: இந்திய தடகள விளையாட்டு வீரர் பிறந்த தினம்!

Advertisements

 1958 ஆம் ஆண்டு கார்டிப்பில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றவர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் மில்கா சிங். ஒலிம்பிக் தடகளத்தில் 1960 ரோமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் 1964 இல் டோக்கியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் மில்கா சிங்.

மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் “பறக்கும் சீக்கியர்’ என அழைக்கப்பட்டார்., அவரது குடும்பத்தினரும் விளையாட்டுத் துறையில் உள்ளவர்களே. மனைவி நிர்மல்கவுர், சர்வதேச கைப்பந்தாட்ட வீராங்கனை. மகன் ஜீவ் மில்கா சிங், மிகச்சிறந்த கோல்ப் வீரராகத் திகழ்கிறார்.இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் 1935ல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க நடந்ததுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கான ஆரம்பப் புள்ளி. தினமும் 20 கிமீ நடந்து சென்று கல்வி பயின்றார். 15 வயதில், இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தில், பெற்றோர் மற்றும் தனது உடன் பிறப்புகளையும் இழந்தார்.

அன்கிருந்து தப்பித்து டில்லியில் உள்ள தன் சகோதரியிடம் அடைக்கலமானார். பிறகு, அவருடைய சகோதரரின் உதவியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் மிக குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் ஒருவராக வந்து, 400 மீ ஓட்டப்பந்தய மொன்றில் ஜெயித்தபோது தான் தன் திறமையை அறிந்தார் மில்கா.

உலகளவில் முதல் எட்டு சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார் மில்கா சிங். காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் எப்போதும் சாம்பியன் தான். 1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங். அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் வெர்ஸஸ் மில்கா சிங் என்று அப்போட்டி விளம்பரப்படுத்தப்பட்டது. இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு, ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், அப்துல் காலிக்கைத் தோற்கடித்தார் மில்கா சிங். பரிசளிப்பு விழாவில், ‘நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்’ என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான். அங்குதான் அவருக்கு ‘ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)’ என்கிற பட்டமளிக்கப்பட்டது. ‘பாகிஸ்தானில் ஓடும் போது, சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு வந்தது’ என்கிறார் மில்கா சிங்.

மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘ரேஸ் ஆஃப் மை லைஃப்’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை அறிந்த பல ஹிந்தி தயாரிப்பாளர்கள் மில்கா சிங்கிடம், படத்துக்கான அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி வரைக்கும் தரத் தயார். ஆனால், மில்கா சிங்கின் மகனும் கோல்ஃப் வீரருமான ஜீவ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு, ‘ரங் தே பசந்தி’ படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாய்ப்பை அளித்து, படத்துக்கான உரிமையாக ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங்.விருதுகள், பதக்கங்கள் 1958 – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீ. மற்றும் 400 மீ. க்கான தங்கப்பதக்கம் பெற்றார். 1962 – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ. க்கான தங்கப்பதக்கம் மற்றும் 1959- ஆம் ஆண்டு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *